×

மோடி-டிரம்ப் இடையே மோதலை உருவாக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் முயற்சி: வெள்ளை மாளிகையில் நடந்த சதி குறித்து அமெரிக்க மாஜி ஆலோசகர் பரபரப்பு பேட்டி

புதுடெல்லி: டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோவின் மிரட்டல்களைப் புறக்கணித்துவிட்டு, உண்மையான பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தினால் வர்த்தகப் பிரச்னைக்கு தீர்வு காணலாம் என அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்கள் மீது 50 சதவீத வரி விதித்ததால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவரோ, இந்தியாவுக்கு ‘வரி மகாராஜா’ எனப் பட்டப்பெயர் சூட்டியதுடன், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை ‘ரத்தப் பணம்’ என்றும் கடுமையாக விமர்சித்தார். இந்தியா தனது வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இறங்கி வராவிட்டால், விளைவுகள் கடுமையாக இருக்கும் எனவும் அவர் மிரட்டல் விடுத்தார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்ரோஷமான கருத்துக்களை வெளியிட்டு வரும் நவரோவின் இத்தகைய நடவடிக்கைகள், பல ஆண்டுகளாகக் கவனமாகப் பேணி வளர்க்கப்பட்ட இந்திய – அமெரிக்க உறவுகளில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘டிரம்ப் – மோடி தலைவர்கள் சந்திப்பின்போது, இரு தலைவர்களுக்கும் இடையே வேண்டுமென்றே மோதலை உருவாக்க நவரோ முயன்றார். சீனா போன்ற அச்சுறுத்தல்கள் குறித்து இரு தலைவர்களும் பேச வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், நவரோவோ இந்திய வர்த்தக நடைமுறைகள் சரியில்லை எனக் கூறி பேச்சை திசை திருப்பினார். நவரோவை ஒரு அறையில் தனியாக விட்டுவிட்டு ஒரு மணி நேரம் கழித்து வந்தால், அவர் அவருடனே வாக்குவாதம் செய்துகொண்டிருப்பார். இந்தியா, சமூக வலைதளங்களில் வெளியாகும் அவரது மிரட்டல்களைப் புறக்கணித்துவிட்டு, உண்மையான பேச்சுவார்த்தையாளர்கள் மூலம் கடினமாக உழைத்தால் தீர்வு காணலாம். வர்த்தகம் முக்கியம் என்றாலும், சீனா போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் உறவே இந்த நூற்றாண்டின் மிக முக்கியத் தேவையாகும். அதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்றார்.

Tags : President ,Peter ,Modi ,Trump ,US ,White House ,New Delhi ,Peter Navarro ,India ,Russia ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு