டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை ஏடிஎம் மூலம் பெறும் வசதியை தீபாவளிக்குள் நடைமுறைக்கு கொண்டுவர ஒன்றிய அரசு திரட்டமிட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் தங்கள் பி.எஃப். கணக்கில் இருந்து திருமணம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக முன்பணம் பெறமுடியும். இதனை பெறுவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த EPFO 3.O என்ற பெயரில் புதிய அம்சங்களை ஒன்றிய அரசு கொண்டுவர உள்ளது. அதன்படி, அவசர தேவையின் போது ஏடிஎம் மூலம் பி.எஃப். பணத்தை பெறும் வகையில் மாற்றம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் அடுத்த மாதம் 10ம் தேதி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. பி.எஃப். பணத்தை ஏடிஎம் மூலம் பெறும் வசதிக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொழிலாளர் வைப்பு நிதியை யுபிஐ மூலம் உடனடியாக பயனர்களின் கணக்கிற்கு அனுப்பும் அம்சங்களையும் கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.1,000லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்துவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
