×

தொற்று நோய் பரவும் அபாயம் வைரிசெட்டிபாளையத்தில் சாலை வசதி கோரி தெருவில் நாற்று நட்டு போராட்டம்

துறையூர், டிச.18: துறையூர் அருகே வைரிசெட்டிப்பாளையத்தில் சாலை வசதி செய்து தரக்கோரி நேற்று அப்பகுதி மக்கள் தெருவில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர். உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சி 2வது வார்டில் மேட்டுக்குரும்பர் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த தெருவில் சாலை வசதி செய்து தரப்படாததால் மண் சாலையாக உள்ளது. இங்கு குடியிருக்கும் பொதுமக்கள், வார்டு உறுப்பினர் கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக அந்த பகுதியில் பெய்யும் மழையால் இந்த தெருவுக்குள் செல்லும் மண் சாலை சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால் டூவிலரில் செல்வோரும், முதியவர்களும், குழந்தைகளும் கீழே விழுந்து கொண்டிருந்தனர். இதனால் அதிருப்தியடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று மாலை திடீரென தெரு சாலையில் இருந்த சேற்றில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர். விரைவில் அந்த பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road facility ,street ,Virichettipalayam ,
× RELATED முன்விரோதத்தில் தாக்கிய வாலிபர் கைது