×

பெரம்பலூரில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட உ.பி. வாலிபர் சிகிச்சைக்கு பின் உறவினரிடம் ஒப்படைப்பு

பெரம்பலூர், செப்.12: மனநலம் பாதிக்கப்பட்டு, பெரம்பலூர் பகுதியில் சுற்றித் திரிந்த உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபரை மீட்டு மனநல சிகிச்சைக்குப் பின் உறவினருடன் அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு எஸ்பி ஆதர்ஷ் பசேரா பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர், நான்குரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த சுரேந்தர் (30) என்ற நபரை பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து, கடந்த ஏப்ரல் 28ம் தேதி பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தீரன் நகர் பகுதியில் இயங்கி வரும் வேலா கருணை இல்லத்திற்கு அழைத்துச்சென்று அதன் நிர்வாகி அனிதா என்பவரிடம் ஒப்படைத்தார்.

பின்னர் சுரேந்தருக்கு அரசு மனநல மருத்துவர் அசோக் என்பவர் மூலம், வேலா கருணை இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குணமடைந்த நிலையில் அவர் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சுரேந்தர் (30) என்பது தெரிய வர அவரது அண்ணனான உத்திரபிரதேசம் மாநிலம், ஜெர்மா, மகாராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த நரேஷ் மகன் அரவிந்த், (33) என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று சுரேந்தரை, அவரது அண்ணன் அரவிந்திடம் பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் மார்கிரேட் மேரி, எஸ்எஸ்ஐ மருதமுத்து, வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா மற்றும் மனநல மருத்துவர் அசோக் ஆகியோர்களால் நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டார். இத்தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா மனநலம் பாதித்து பெரம்பலூரில் சுற்றித்திரிந்த சுரேந்தரை மீட்டு சிகிச்சை அளித்து பாதுகாப்பான முறையில் உறவினரிடம் ஒப்படைக்க உதவிய அனைவரையும் பாராட்டினார்.

 

Tags : Perambalur ,Adarsh Basera ,Uttar Pradesh ,Nangurudu ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 49,548 வாக்காளர்கள் நீக்கம்