×

தூய்மைப்பணியாளர்கள் போராட்ட விவகாரம் மனித உரிமை ஆணையம் விசாரிக்க கோரி வழக்கு: தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சியில், தூய்மைப்பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடத்திற்கு வெளியில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதே மாதம் 13ம் தேதி நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது, தூய்மைப்பணியாளர்களை தாக்கி, காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகவும் கூறி ஜோதி என்பவர் உள்பட 12 பெண் தூய்மைப்பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், 1400 பெண் தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை கலைப்பதற்கு ஆயிரம் ஆண் காவலர்களும், 200 பெண் காவலர்களும் மட்டுமே அழைத்து வரப்பட்டனர். போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தூய்மைப்பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்ட நீதிமன்றம், கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டுமென காவல்துறைக்கு அறிவுறுத்தி இருந்தது.

உயர் நீதிமன்ற அறிவுறுத்தலையும் வழிகாட்டி வழிமுறைகளையும் மீறி காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கூறியும் அவர்கள் மறுத்ததால் கைது செய்யப்பட்டனர். அப்போது காவல்துறையினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்குதல் நடத்தினர்.

தூய்மைப்பணியாளர்களுடன் சட்ட விரோத கும்பல் நுழைந்து தாக்குதலை நடத்தியதுடன், பேருந்துகளையும் சேதப்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ ஆதாரங்களும் உள்ளதாக குறிப்பிட்டார். இதைக்கேட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏன் அமைதியாக கலைந்து செல்லவில்லை?.

அரசு ஒரு கொள்கை முடிவை அறிவிக்கும்போது அது குறித்து வாக்களித்து தேர்ந்தெடுத்த கலெக்டர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும் அல்லது சட்ட ரீதியாக அணுக வேண்டும். போராட்டங்களை அனுமதி பெற்று அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடத்த வேண்டும் என்று தெரிவித்து, அனைத்து ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Tags : High Court ,Tamil Nadu government ,Chennai ,Chennai Corporation ,Ripon Building ,
× RELATED கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில்...