துபாய்: ஒருநாள் போட்டிகளின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டாப்-15 இடங்களில் மாற்றமில்லை. இந்தியாவின் சுப்மன் கில் முதலிடத்திலும், ரோகித் சர்மா 2வது இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் 3வது இடத்திலும், இந்தியாவின் விராட் கோஹ்லி 4வது இடத்திலும் தொடருகிறார்கள். மற்றொரு இந்தியா வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 8வது இடத்தில் உள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதமடித்த இங்கிலாந்தின் ஜோ ரூட் 5 இடங்கள் முன்னேறி 19 இடத்தையும் பிடித்து உள்ளார்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென் ஆப்ரிக்கா சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் முதலிடத்திலும், இலங்கையின் தீக்ஷனா 2வது இடத்திலும் உள்ளனர். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 16 இடங்கள் முன்னேறி 3வது இடத்தை பிடித்து உள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 9 ஓவர்கள் வீசி 3 மெய்டனுடன் 18 ரன் மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் இந்த முன்னேற்றம் கிடைத்து உள்ளது. மற்றொரு இங்கிலாந்து பந்துவீச்சாளர் அடில் ரஷித் 15வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இந்திய பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 4வது இடத்திலும், ஜடேஜா 2வது இடத்திலும் உள்ளனர். ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் டாப் 10 இடங்களில் மாற்றமில்லை. சிக்கந்தர் ராசா முதலிடத்தில் தொடருகிறார். இந்தியாவின் ஜடேஜா 9வது இடத்தில் உள்ளார்.
