தொண்டி அருகே இடியும் நிலையில் புயல் காப்பகம்: அசம்பாவிதம் முன் அகற்றப்படுமா?

தொண்டி, டிச. 18: தொண்டி அருகே இடியும் நிலையில் உள்ள புயல் காப்பகத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். புயல், மழை காலங்களில் இப்பகுதி மீனவர்களை பாதுகாக்க தங்க இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு புயல் காப்பகம் கட்டப்பட்டது. தற்போது இந்த காப்பகம் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. மேலும் காப்பகத்தை சுற்றி முட்புதர்கள் அதிகம் வளர்ந்து காணப்படுகிறது.

குடியிருப்பு பகுதியில் உள்ள இக்காப்பகம் இடிந்து விழுந்தால் பெரும் சேதத்தை ஏற்படுத்தும். அதனால் இதனை இடித்து விட்டு, புதிய புயல் காப்பகம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த மீனவர் எஸ்கிளீன் கூறுகையில், ‘குடியிருப்பு, கடைவீதி பகுதியில் இந்த புயல் காப்பகம் இருப்பதால் இவ்வழியே செல்வோர் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

பெரும் புயல், மழை காலங்களில் காப்பகம் இடிந்து விழுந்து விடுமோ என்ற ஒருவித பயத்துடனே இருக்க வேண்டியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் உடனடியாக இதனை இடித்து விட்டு புதிய புயல் காப்பக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

>