×

மதிப்பு கூட்டும் வகையில் இன்ட்கோ சர்வ் தயாரிப்புகளுக்கு தர சான்றிதழ் பெற நடவடிக்கை

ஊட்டி, டிச. 18: இன்ட்கோ சர்வ் தயாரிப்புகளுக்கு மதிப்பு கூட்டும் வகையில் ட்ரஸ்டீ மற்றும் பேர் டிரேட் தர சான்றிதழ்களை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இன்ட்கோ சர்வ் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய தேயிலை கூட்டுறவு கூட்டமைப்பாக குன்னூர் இன்ட்கோ சர்வ் நிறுவனம் விளங்கி வருகிறது. இன்ட்கோ டீ அவுஸ் என்ற பெயரில் டீ மற்றும் தின்பண்டங்கள் விற்பனையக துவக்க விழா குன்னூரில் நடந்தது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார்.  மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இன்ட்கோ சர்வ் தலைமை செயல் அலுவலர் சுப்ரியா சாஹூ தலைமை வகித்து இன்கோ டீ அவுஸ் விற்பனையகத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், இன்ட்கோ சர்வ் தயாரிப்புகளுக்கு மதிப்பு கூட்டும் வகையில் ட்ரஸ் டீ , பேர் டிரேட் தர சான்றிதழ்களை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் முதற்கட்டமாக 5 தொழிற்சாலைகளை நவீனமயமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  இதன் மூலம் தரமான தேயிலை தூளை உற்பத்தி செய்து ஏற்றுமதி சந்தையில் கால்பதிக்க ஏதுவாக அமையும். கூட்டுறவு தொழிற்சாலைகளில் ஆண்டுக்கு 13 மில்லியன் கிேலா தேயிலை தூள் உற்பத்தி செய்யப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயிலின் சில மெட்ரோ ரயில் நிலையங்களில் இத்தகைய தேநீர் மற்றும் ஸ்நாக்ஸ் விற்பனையகத்தை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.  தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி, இன்ட்கோ சர்வ்வின் புதிய இ-காமர்ஸ் வலைதளத்தை துவக்கி வைத்தார். இவ்வலை தளம் அனைவரும் எளிய வகையில் கையாளும் விதத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் அனைத்து இன்ட்கோ தேயிலை தூள் ரகங்கள் பற்றி விவரங்களை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும் இவை அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் வளைதளங்களிலும் கிடைக்கபெறும் என தெரிவிக்கப்பட்டது.  தொடர்ந்து நீலகிரியின் உயிர்கோளம் மற்றும் வன வளத்தை பாதுகாக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு தேவையான தகவல்களுடன் உருவாக்கப்பட்ட 25 போக்குவரத்து தடுப்பான்கள் மாவட்ட எஸ்பி. சசிமோகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்ட்கோ சர்வின் 2021ம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியிடப்பட்டது. இதில் டேன்டீ மேலாண்மை இயக்குநர் சீனிவாஸ் ரெட்டி, இன்ட்கோ சர்வ் ஆலோசகர் சீனிவாசன் ஸ்ரீராம் மற்றும் இன்ட்கோ தேயிலை தொழிற்சாலைகளின் தலைவர்கள், மேலாண்ைம இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தனியாக பயணம் செய்கின்ற பெண்களின்...