×

பணம் இல்லாததால் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவிக்கு அரசு செலவில் பொறியியல் கல்லூரியில் சேர ஆட்சியர் நடவடிக்கை

குடும்பத்துடன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே அத்தியூர் திருக்கையை சேர்ந்த அய்யனார் மகள் வினிதா. இவர் கடந்த 1ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்திருந்தார். அதில் எங்கள் ஊரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து 521 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன்.

பொறியியல் படிக்க விண்ணப்பித்ததாகவும், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் 7.5 சதவீத அரசு இடஒதுக்கீட்டில் கல்லூரியில் சேர விண்ணப்பித்தேன். அதில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்து சேர்ந்தேன். ஆனால் பெற்றோர் வயதானவர்கள், சென்னையில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

அதனால் இக்கல்லூரியில் படிப்பை தொடர முடியாமல், விடுதியுடன் கூடிய கல்லூரியில் சேர அடுத்த சுற்றில் விண்ணப்பித்தேன். அதில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடடில் விண்ணப்பிக்க சென்றபோது தவறுதலாக பொதுப்பிரிவில் விண்ணப்பித்து விட்டேன். இதனால் சேலம் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. அந்த கல்லூரியில் அவ்வளவு பணம் கட்டி படிக்க முடியாது.

இருப்பினும் ஓராண்டு வீணாகிவிடும் என்று கல்விக்கடன் பெற்று சமாளித்துவிடலாம் என்று ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி கல்லூரியில் கட்டினேன். தொடர்ந்து பெற்றோரால் கல்விக்கடன் பெற்று படிக்க வைக்க முடியாது என்று கூறி படிப்பையும் பாதியில் நிறுத்தி விட்டார்கள். எனவே எனக்கு அரசு ஒதுக்கீடான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் விடுதியுடன் கூடிய கல்லூரியில் இடம் பெற்றுத்தர வேண்டுமென்று கூறியிருந்தார்.

இந்த மனு மீது நடவடிக்கை எடுத்த ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், மாணவி வினிதாவுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் முழுமையாக அரசு செலவில் படிப்பதற்கு விழுப்புரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேருவதற்கான ஆணையை வழங்கி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தார்.

இந்த ஆணையை பெற்ற மாணவியும் அந்த கல்லூரியில் இசிஇ பிரிவில் சேர்ந்து கல்லூரி படிப்பை தொடர்ந்துள்ளார். இதனிடையே நேற்று மாணவி வினிதா தனது குடும்பத்துடன் வந்து ஆட்சியரை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Tags : Villupuram ,Vinitha ,Ayyanar ,Athiyur ,Thirukkai ,
× RELATED நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!