×

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

சென்னை: மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. மதுரை மாநகராட்சியில் கட்டிடங்களுக்கு வரி நிர்ணயம் செய்ததில் பல ேகாடி முறைகேடு விவகாரம் குறித்து மதுரை சரக டிஐஜி அபிநவ்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து, சிபிஐ விசாரணை தேவையில்லை என உத்தரவிட்டனர். இதை எதிர்த்து, மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரியிருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின், ‘‘ரூ.200 கோடி ஊழல் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அளவிற்கு சொத்து வரியில் முறைகேடு நடந்துள்ளது. இந்த ஊழலில் மாநகராட்சி மேயரின் பெயர் குறிப்பிடப்படுகிறது. எனவே, அதன் உண்மை தன்மையை அறியும் விதமாக, சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘‘எதற்கு எடுத்தாலும் சிபிஐ விசாரணை கேட்பதா? இந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை விரிவாக விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட முடியாது’’ என்று திட்டவட்டமாக கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,CBI ,Madurai Corporation ,Chennai ,Madurai DIG ,Abhinav Kumar ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...