×

11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை வட தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று தீவிரமாக பெய்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும், கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, திருநெல்வேலி, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பாளையங்கோட்டை, கரூர் மாவட்டங்களில் நேற்று 100 டிகிரி வெயில் கொளுத்தியது.

மேலும், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, ஈரோடு மாவட்டங்களில் 99 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது.
அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் நாளை கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில், இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி வரை இருக்கும். குமரிக் கடல் பகுதிகள், அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும். அதனால் மீனவர்கள் இன்று அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Tags : Chennai ,Tamil Nadu ,North Tamil Nadu ,South Tamil Nadu… ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!