×

அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக்கல்லூரிகள்: நடவடிக்கை எடுக்க பெ.சண்முகம் வலியுறுத்தல்

சென்னை: தனியார் மருத்துவ கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் பெறும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் தனியார் நடத்துகிற 22 மருத்துவக் கல்லூரிகளிலும், 4 மருத்துவ பல்கலைக்கழகங்களிலும், 2025-26ம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஒதுக்கீடு பெற்ற மாணவர்களை சில நிர்வாகங்கள், அழைத்து கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டுமென்று கட்டாயப்படுத்துகின்றன. தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களின் இம்மாதிரியான அணுகுமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கடுமையாக எச்சரித்து இருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மருத்துவக் கல்வி இயக்குனரகம் ஒரு சுற்றறிக்கையும் அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் அனுப்பி இருக்கிறது. இருந்த போதிலும் இந்த விதி மீறலும், பண வசூலும் தொடர்வதாக பல புகார்கள் பெற்றோர்கள் மத்தியில் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, தமிழக அரசு உடனடியாக தலையீடு செய்து இம்முறைகேட்டை தடுத்து நிறுத்துவதோடு, இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் முறையான விசாரணை நடத்தி நிர்வாகத்திடமிருந்து பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளுக்கு மாறாக, மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : P. Shanmugam ,Chennai ,Communist Party of India ,Tamil Nadu… ,
× RELATED திருநெல்வேலியில் பொருநை...