×

சி.பி.ராதாகிருஷ்ணன்-சுதர்சன் ரெட்டி போட்டி; நாளை துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இன்று மாதிரி வாக்குப்பதிவு

புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அதில் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக தலைவராக பதவி வகித்து வந்த ெஜகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி திடீரென தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடசி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணனும், இதேபோல் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தெலங்கானாவை சேர்ந்தவருமான பி.சுதர்சன ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலை ஒரு சித்தாந்த போர் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த தேர்தலில் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதியானவர்கள் என்பதால், பாஜ வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றி உறுதியாகி இருந்தாலும், இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தன் வெற்றியை உறுதி செய்வதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து தேசிய ஜனநாயக உறுப்பினர்களுக்கு பாஜ சார்பில் 3நாள் பயிற்சி கடந்த 6ம் தேதி முதல் நடந்து வருகிறது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் மோடி இன்று இரவு விருந்து அளிக்க உள்ளார். இதற்கிடையே இந்தியா கூட்டணி சார்பில் மாதிரி வாக்கெடுப்பு இன்று மதியம் 2.30 மணிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இதில், இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் மற்றும் சுதர்சன் ரெட்டியை ஆதரிக்கும் இதர கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்கிறார்கள். இதனை தொடர்ந்து இரவில் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விருந்தளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே துணை ஜனாதிபதி தேர்தல் அதிகாரியும், மாநிலங்களவை செயலாளருமான பி.சி.மோடி கூறுகையில், “துணை ஜனாதிபதி தேர்தல் செவ்வாய்கிழமை(நாளை) நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் எப்-101ல் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் மாலை 6மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும்.

எண்ணிக்கை முடிந்ததும் யார் வெற்றி பெற்றார்கள் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் ” என்றார். இந்த தேர்தலில் மொத்தம் 788 எம்.பி.க்கள் வாக்களிக்கலாம். ஆனால், 7 எம்.பி பதவியிடங்கள் காலியாக உள்ளதால் 781 பேர் மட்டும் இந்த முறை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். மொத்தமுள்ள 543 மக்களவை உறுப்பினர் பதவியிடங்களில் 2 இடம் காலியாக உள்ளது. இதனால், 541 மக்களவை எம்.பி.க்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 233 மாநிலங்களவை உறுப்பினர்களில் 5 இடம் காலியாக இருக்கிறது. இதனால், 228 மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் தவிர மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்கள் 12 பேரும் துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கலாம்.

சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி உறுதி
துணை ஜனாதிபதி தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை சேர்ந்த 781 எம்.பி.க்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 439 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளதால் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இந்திய கூட்டணியின் வேட்பாளருக்கு தற்போதைய நிலவரத்தின்படி 324 வாக்குகள் கிடைப்பது உறுதி. பிஜூ ஜனதா தளத்தின் 7 எம்.பி.க்கள், பிஆர்எஸ் கட்சியின் 4 எம்.பி.க்கள் மற்றும் அகாலிதளம் உள்ளிட்ட 3 சிறிய கட்சிகளின் தலா ஒரு எம்.பிக்கள் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என்பதை இன்னமும் அறிவிக்கவில்லை. இது ரகசிய ஓட்டு முறை என்பதால் ஒரு சிலர் கட்சி மாறி வாக்களிக்கவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

துணை ஜனாதிபதிக்கு சம்பளம் கிடையாது
இந்திய அரசியலமைப்பின் இரண்டாவது உயரிய பதவியான துணை ஜனாதிபதிக்கு மாதசம்பளம் என எதுவும் கிடையாது. ஆனால் ஏராளமான சலுகைகள் உள்ளன. அரசியல் சட்ட அந்தஸ்துடைய பதவிகளில் சம்பளம் ஏதுமில்லாத ஒரே பதவி இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மாநிலங்களவை தலைவராக பணியாற்றுவதற்காக துணை ஜனாதிபதிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். அத்துடன் துணை ஜனாதிபதிக்கு இலவச தங்குமிடம், மருத்துவப்படிகள், தனிப்பட்ட பாதுகாப்பு வசதிகள், ரயில் மற்றும் விமானப்பயணம், மொபைல் போன் சேவை மற்றும் ஊழியர்கள் என பல்வேறு சலுகைகள் உள்ளன. மேலும், அவர் ஓய்வு பெற்ற பிறகு மாதம் ரூ.2 லட்சம் ஓய்வூதியம், டைப் 8 தரத்திலான பங்களா, 2 தனிசெயலாளர்கள், தனி உதவியாளர், மருத்துவர், நர்சிங் அதிகாரி மற்றும் அவரது அலுவலகத்தில் நான்கு பணியாளர்கள் இருப்பர். அத்துடன் முன்னாள் துணை ஜனாதிபதி இறந்த பிறகும், அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் தங்குவதற்காக டைப்-7 பங்களா ஒதுக்கீடு செய்யப்படும்.

Tags : C.P. Radhakrishnan ,Sudarshan Reddy ,Vice Presidential election ,New Delhi ,Jagdeep Dhankhar ,14th Vice President of ,India ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது