×

முதுநிலை நுழைவு தேர்வில் தோல்வி; துப்பாக்கியால் சுட்டு இளம் மருத்துவர் தற்கொலை: பீகாரில் பயங்கரம்

பாட்னா: பீகாரில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில், இளம் மருத்துவர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் மருத்துவர் அசுதோஷ் சந்திரா (25), தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவர் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாததால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது தாய் மற்றும் பாட்டியுடன் சிற்றுண்டி அருந்திய பின்னர், படிப்பதற்காகத் தனது அறைக்குச் சென்றுள்ளார். அங்கு, தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் தலையில் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டு குடும்பத்தினர் அவரது அறைக்கு ஓடிச் சென்றுள்ளனர். ஆனால், கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அசுதோஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதக்கு அனுப்பி வைத்தனர். அவரது அறையில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும், தேர்வுத் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தமே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags : Bihar ,Patna ,Ashutosh Chandra ,Muzaffarpur district ,
× RELATED ரயில் டிக்கெட் முன்பதிவு நிலையை...