×

ராகுலின் இங்கிலாந்து குடியுரிமை விவகாரம்; பாஜக பிரமுகருக்கு அமலாக்கத்துறை சம்மன்: ஏற்கனவே சிபிஐ விசாரித்த நிலையில் திருப்பம்

புதுடெல்லி: ராகுல் காந்தியின் இங்கிலாந்து குடியுரிமை குறித்து புகார் அளித்த பாஜக பிரமுகருக்கு, அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையைப் பெற்றுள்ளதாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் எஸ்.விக்னேஷ் சிஷிர் என்பவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

ராகுல் காந்தி இங்கிலாந்து குடிமகனாக இருந்தால், அவர் இந்தியத் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்றும், அதற்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விக்னேஷ் சிஷிரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்பட்டதால், அவருக்கு 24 மணி நேரப் பாதுகாப்பு வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, புகார் அளித்த விக்னேஷ் சிஷிருக்கு தங்களது விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் விசாரணைக்காக, வரும் 9ம் தேதி அனைத்து ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, தனது புகார் குறித்து மத்திய புலனாய்வுத் துறையும் (சிபிஐ) ஜூன் மாதம் முதல் விசாரணை நடத்தி வருவதாகவும், டெல்லியில் பலமுறை நேரில் ஆஜராகி ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் விக்னேஷ் சிஷிர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். மேலும், ராகுல் காந்தியின் குடியுரிமை நிலை குறித்து இங்கிலாந்து அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தரப்பிலும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Rahul ,UK ,BJP ,CBI ,NEW DELHI ,RAHUL GANDHI ,ENFORCEMENT DEPARTMENT ,Congress ,People's Opposition ,Karnataka ,
× RELATED நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி...