×

ஜீவனாம்சம் வழங்காததால் கணவர் வீட்டு வாசலில் மகனுடன் பெண் தர்ணா

தஞ்சை, டிச. 17: ஜீவனாம்சம் வழங்காததால் தஞ்சையில் கணவர் வீட்டின் முன் மகனுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தஞ்சை பூக்காரத்தெரு வடக்கு லாயத்தை சேர்ந்தவர் பரமேஷ்வரன் (45). இவர் வீட்டின் அருகே டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் தஞ்சை அடுத்த கண்டிதம்பட்டு கிராமத்தை சேர்ந்த சுமதி (37) என்பவருக்கும் 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே பிரச்னை காரணமாக விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். அதன்படி 2011ம் ஆண்டு கோர்ட் மூலம் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து சுமதி தனது தாய் வீடான கண்டிதம்பட்டில் மகனுடன் வசித்து வந்தார். இதற்கிடையே பரமேஷ்வரன் தனக்கு ஜீவனாம்சம் தர வேண்டுமென கோர்ட்டில் சுமதி வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த கோர்ட் மாதம்தோறும் ரூ.6 ஆயிரத்தை சுமதிக்கு ஜீவனாம்சமாக வழங்க வேண்டுமென பரமேஷ்வரனுக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஆரம்பத்தில் ரூ.6,000 கொடுத்து விட்டு பின்னர் பல மாதங்களாக கொடுக்கவில்லையென சுமதி கூறி வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் சுமதி தனது மகனை அழைத்து கொண்டு பூக்கார தெரு வடக்கு லாயத்தில் உள்ள பரமேஷ்வரனின் வீட்டுக்கு வந்தார். பின்னர் அந்த வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதுடன் ஜீவனாம்சம் வழங்க வேண்டுமென கோஷமிட்டார்.  இந்த தகவல் கிடைத்ததும் தஞ்சை தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுமதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பரமேஷ்வரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தேர்தல் அலுவலர்களிடம் தகராறில்...