×

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு; எடப்பாடிக்கு எதிரான வழக்கு நிராகரிப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் சூர்ய மூர்த்தி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு நடைபெற்றது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி வாதிடும்போது,‘2018ம் ஆண்டிலிருந்து சூர்ய மூர்த்தி கட்சியின் உறுப்பினராக இல்லை. அதிமுக வேட்பாளரை எதிர்த்து சூர்ய மூர்த்தி போட்டியிட்டார். கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சி விவகாரம் குறித்து மனுத்தாக்கல் செய்ய முடியாது,’ என்றார்.

சூர்ய மூர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘கட்சி விதிப்படி கட்சியின் உறுப்பினராக சூரியமூர்த்தி தொடர்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் அடிப்படை விதி. அதனை பொதுக்குழுவால் மாற்ற முடியாது,’ என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு நேற்று தீர்ப்பளித்த நீதிபதி பி.பி.பாலாஜி, ‘எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டார். மேலும், பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் சூர்ய மூர்த்தி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து,’ உத்தரவிட்டார்.

Tags : AIADMK ,Edappadi ,Chennai ,Madras High Court ,Surya Murthy ,Edappadi Palaniswami ,AIADMK… ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...