×

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் நிலைகுலைந்துள்ள ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு துணை நிற்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்!

சென்னை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் நிலைகுலைந்துள்ள ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு துணை நிற்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா? என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடந்து வந்தது. ஏற்கனவே வழக்கு விசாரணை நடந்த போது, “அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என, ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி தீர்ப்பு அளித்தனர். அதில், “அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற வேண்டும் என்றால், ‘டெட்’ எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதே நேரத்தில், ஓய்வு பெறும் வயதை எட்டுவதற்கு ஐந்தாண்டுகள் மட்டுமே இருக்கக்கூடிய ஆசிரியர்கள் பணியில் தொடரலாம். ஐந்து ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்கக்கூடிய அத்தனை ஆசிரியர்களும் தொடர்ந்து ஆசிரியராக பணியில் தொடர, ஆசிரியர் தகுதித் தேர்வில், நிச்சயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு எழுத விருப்பமில்லை என்றால், தாராளமாக அவர்கள் ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்து விட்டு வெளியேறலாம். அவர்கள், ஓய்வு பெறும் போது கிடைக்கும் சலுகைகளை பெற்று, இப்போதே கட்டாய பணி ஓய்வு பெற்றுக் கொள்ளலாம். மேலும் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில், ஆசிரியர் தகுதித் தேர்வை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கட்டாயப்படுத்த முடியுமா? என்பதை விசாரிப்பதற்காக அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம்” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், தமிழகத்தில் அரசு பணியில் உள்ள, 85,000 ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால், தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவு, அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் பாதிக்கப்படாமல் ஆசிரியர்களுக்குத் துணை நிற்கும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருப்பது ஆறுதல் தருகிறது.

எதிர்காலம் பற்றிய கவலை சூழ்ந்த நிலையில் கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசு உடனடியாக தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : TAMIL NADU GOVERNMENT ,SUPREME COURT ,Chennai ,Senior Secretary General ,Wiko ,Government of Tamil Nadu ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்