×

காவிரி குடிநீர் வராததால் கண்மாய் நீரை குடித்து வரும் அவலம் பாசிபடர்ந்துள்ளதால் நோய் அச்சம்

கமுதி, டிச.16:  கமுதி அருகே காவிரி குடிநீர் சரிவர வராததால் கண்மாய் நீரை கிராமத்தினர் குடித்து வருகின்றனர். கமுதி அருகே நாராயணபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய உடப்பங்குளம் கிராமத்தில், சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விவசாயத்தை மட்டும் நம்பி வாழும் இப்பகுதியினருக்கு, நீண்ட காலமாக குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது. இப்பகுதிக்கு வரும் காவிரி கூட்டு குடிநீர்,வாரத்திற்கு இரண்டு முறை தான் வருகிறது.

அனைத்து குடும்பங்களுக்கும் இந்த தண்ணீர், போதுமானதாக இல்லை என்பதால், குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். ஒரு குடும்பத்திற்கு 6 குடம் தண்ணீர் மட்டும்தான் கிடைக்கும். மறுமுறை குடிநீர் வரும் வரை இதனைக் கொண்டு தான் பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளனர். இதனால் குடிநீரை குடம்  ரூ.10க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். வீட்டு உபயோகத்திற்கும் விலை கொடுத்துதான் வாங்க வேண்டிய நிலையும் உள்ளது.

தற்போது மழை பெய்து கண்மாய்களில் தண்ணீர் பெருகி உள்ளதால், நீண்ட தூரம் நடந்து வந்து தள்ளுவண்டிகளில் குடங்களை வைத்துக்கொண்டு, கண்மாய் நீரை எடுத்துச் செல்கின்றனர். அந்த தண்ணீரை குடிக்கவும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். பச்சை பசேலென்று பாசி படர்ந்து சாலையோரத்தில் கிடக்கும் இந்த தண்ணீரைத்தான் குடித்து வருகின்றனர். சில சமயங்களில் இப்பகுதியிலுள்ள சிறுவர், சிறுமியர்கள் அதிகமாக தண்ணீர் பெருகி நிற்கும் கண்மாயில் பாதுகாப்பில்லாமல் இறங்கி குடங்களில் தண்ணீரை எடுக்கின்றனர்.

இதனால் விபரீதங்கள் நடக்கும் அபாயம் உள்ளது. மேலும் இந்த தண்ணீரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் குடிக்கவும் செய்கின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. உடனடியாக இப்பகுதியின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென இப்பகுதியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Cauvery ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி