×

சென்னை, தாம்பரம் கவுன்சிலர்கள் உசிலம்பட்டி நகராட்சி தலைவரை பதவி நீக்கிய உத்தரவுகள் ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, சென்னை மாநகராட்சியின் 189வது வார்டு கவுன்சிலர் பாபு, 5வது வார்டு கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 40வது வார்டு கவுன்சிலரும், மண்டல குழு தலைவருமான ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோரை பதவி நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவுகளை எதிர்த்து நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி என்.மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பதவி நீக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசுக்கு விரிவான பதில் அளித்தும், அவற்றை பரிசீலிக்காமல், எந்த காரணத்தையும் தெரிவிக்காமல் விளக்கமளிக்க அவகாசம் வழங்காமல் தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத்தரப்பில், இவர்களை பதவி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு சரியானதுதான். உரியவாய்ப்பு தரப்பட்ட பிறகே பதவி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நோட்டீஸ்களுக்கு கவுன்சிலர்கள் அளித்த பதிலை எந்த காரணமும் தெரிவிக்காமல் அரசு நிராகரித்துள்ளது. விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கப்படவில்லை. எனவே, மனுதாரர்கள் நான்கு பேரையும் பதவி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், மனுதாரர்களின் பதிலை பரிசீலித்து, விளக்கமளிக்க அவகாசம் வழங்கி சட்டப்படி நான்கு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

Tags : Chennai ,Tambaram ,Usilampatti Municipality ,Chennai Corporation ,189th Ward Councillor ,Babu ,5th Ward Councillor ,K.P. Sokkalingam ,Tambaram Corporation ,40th Ward ,Councillor ,Zonal Committee ,Jayapradeep ,11th Ward Councillor… ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...