×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 24ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடக்கம்: அக்டோபர் 2ம் தேதி வரை நடக்கிறது

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் பல்வேறு உற்சவங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது வருடாந்திர பிரம்மோற்சவம். கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவத்தில் மலையப்பசுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.அதன்படி இந்தாண்டு வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 24ம்தேதி தொடங்கி அக்டோபர் 2ம்தேதி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி வரும் 16ம்தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மை பணி) நடைபெறும். தொடர்ந்து 23ம் தேதி மாலை அங்குரார்ப்பணம், விஷ்வசேனாதிபதி உற்சவம் நடைபெறும். 24ம்தேதி மாலை 5.45 மணி முதல் 6.15 மணி வரை தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படும். இதைதொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சுவாமி வீதியுலா நடைபெறும்.
முதல்நாளான 24ம்தேதி இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி வீதியுலா நடைபெறும். 9ம்நாளான 2ம்தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை திருமஞ்சனம் மற்றும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும், இரவு கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.பிரம்மோற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தேவஸ்தானம் சார்பில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Tags : Brahmotsavam ,Tirupati Ezhumalaiyan Temple ,Tirumala Tirupati Ezhumalaiyan Temple ,Lord Malayappaswamy ,Mada ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது