×

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்; விண்ணப்பங்களை சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு : உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் பீகார் வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. முன்னதாக இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,” ஆதார் அட்டையையும் வசிப்பிட ஆவணமாக இணைத்து பதியலாம் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்‌ஷி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆட்சேபனைகளை செப்டம்பர் 1ம் தேதி வரையில் (நேற்று) இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தோம். இதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டில் தயாரிக்கப்பட்டாலும், ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நாங்கள் மேலும் நீட்டித்துள்ளோம். எனவே வாக்காளர்களால் வழங்கப்படக் கூடிய ஆட்சேபனை விண்ணப்பங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடர்ந்து பரிசீலிக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கான கடைசிநாள்வரை விண்ணப்பங்களை தரலாம் என்று தெரிவித்தார்.

இதையடுத்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், “ஆதார் அட்டையை வசிப்பிட ஆவணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முன்னதாக உச்ச நீதிமன்றம் தெளிவாக தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கான பட்டியலில் தற்போது வரையில் ஆதாரை ஆவணமாக தேர்தல் ஆணையம் இணைக்காமல் இருந்து வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் பல பகுதியில் தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதில் சிக்கி உள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பம் தாக்கல் செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு கால அவகாசம் இல்லாத நிலையில், அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், வாக்காளர் பட்டியல் பணியில் தனி நபர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தன்னார்வலர்கள் உதவிட வேண்டும். இதைத்தொடர்ந்து தன்னார்வலர்கள் மேற்கொணட பணியை மாவட்ட அமர்வு நீதிபதியிடம் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : Bihar ,Election Commission ,Supreme Court ,New Delhi ,Election Commission of India ,
× RELATED அசாமில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு...