×

நள்ளிரவில் 6 புள்ளி ரிக்டர் அளவில் பூகம்பம்;ஆப்கன் நிலநடுக்கத்தில் 800 பேர் பலி; 2,500 பேர் காயம்; மீட்பு பணிகள் தீவிரம்; ஒரு கிராமமே அழிந்ததாக மக்கள் கண்ணீர்

காபூல்: ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் 6 ரிக்டர் அளவில் பதிவான பயங்கர நிலநடுக்கத்தில் 800 பேர் பலியாகி உள்ளனர். 2,500 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தில் ஒரு கிராமமே ஒட்டுமொத்தமாக மண்ளோடு மண்ணாகிவிட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் விட்டு கதறினர்.பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கிழக்கு ஆப்கானிஸ்தானில் குனார் மாகாணத்தையும், அருகில் உள்ள நங்கஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரையும் மையமாக கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 11.47 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜலாலாபாத் நகரில் இருந்து 27 கிமீ தொலைவில், 8 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற குறைவான ஆழம் கொண்ட நிலநடுக்கங்களே கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், குனார் மற்றும் நங்கஹார் மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. 6 புள்ளிகள் ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில் அடுத்தடுத்து பல நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் பல வீடுகள் தரைமட்டமாகின. நள்ளிரவு நேரம் என்பதால் பலரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் வீடுகள் இடிந்து இடிபாடுகளில் சிக்கினர். இவ்விரு மாகாணங்களும் மலையால் சூழ்ந்த பகுதி. நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதியில்

அமைந்தவை. இதனால் உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ள முடியாத சூழலில், பொதுமக்களே வெறும் கைகளால் கட்டிட இடுபாடுகளை அகற்றி இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர்.மலை மீது அமைந்துள்ள பல கிராமங்களுக்கு ஹெலிகாப்டரில் மட்டுமே செல்ல முடியும் என்பதால் தலிபான் அரசு 35க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களை மீட்பு பணியில் ஈடுபடுத்தி, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர். இந்த நிலநடுக்கத்தில் 800 பேர் பலியானதாகவும், 2,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் தலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் உறுதிபடுத்தி உள்ளார். ஆப்கானிஸ்தான் கிராமப்பகுதிகளில் பெரும்பாலும் மண், செங்கற்களால் மட்டுமே வீடுகள் கட்டப்படுவதால், மோசமான கட்டுமானம் காரணமாக பல ஆயிரம் வீடுகள் இடிந்துள்ளன.

குனாரில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான நூர்கல் மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர், கிட்டத்தட்ட முழு கிராமமும் அழிந்துவிட்டதாக கண்ணீர் மல்க கூறி உள்ளார். குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் அதிகளவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி மீட்க முடியாமல் தவிப்பதாகவும் உதவிக்கு கூட யாருமில்லை என அவர் தெரிவித்துள்ளார். நூர்கலின் மசார் தாரா பகுதியில் வசிக்கும் சாதிகுல்லா என்பவர் கூறுகையில், ‘‘பெரிய புயல் வீசுவதைப் போல சத்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒட்டுமொத்த மலையும் குலுங்கியது போல இருந்தது. வீடு இடிந்ததும் நான் பாதி அளவு புதைந்து விட்டேன்.

என் மனைவி, 2 மகன்கள் இறந்து விட்டனர்’’ என்றார். சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷரபத் ஜமான் கூறுகையில், ‘‘தலைநகர் காபூலில் இருந்து குனார், நங்கர்ஹார் பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் விரைந்துள்ளனர். பல பகுதிகளில் உயிரிழப்புகள் இன்னும் கணக்கிட முடியவில்லை. எனவே பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது’’ என்றார்.கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4,000 பேர் பலியானதாக தலிபான் அரசு தெரிவித்தது. அது ஆப்கானில் சமீபத்திய வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரழிவாகும்.

மனிதாபிமான உதவி வழங்க தயார்: மோடி
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 800க்கும் மேற்பட்டோர் பலியானது குறித்து பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், ‘‘ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் துயரமடைந்த குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வாழ்த்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது’’ என்றார்.

Tags : earthquake ,Kabul ,Afghanistan ,
× RELATED பயணத்தடை கட்டுப்பாடுகள் பட்டியலில் மேலும் 20 நாடுகள்: அமெரிக்கா அதிரடி