சென்னை: அமெரிக்காவின் 50 சதவீத வரி உயர்வால் பாதிப்புக்குள்ளான திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் நகரம், நாட்டின் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றி வருகிறது. இதன் மூலம் இந்தியாவிற்கு பெருமளவு அந்நியச் செலாவணி கிடைக்கிறது. மேலும், ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் இத்தொழிலில் வேலை வாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.
அமெரிக்கா, இந்தியாவில் இருந்து வரும் நெய்த ஆடை ஏற்றுமதிக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது. இதனால், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்காக உடனடி நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இழப்பீடு மற்றும் சலுகைகள் சுங்கவரி உயர்வால் ஏற்பட்ட போட்டித்திறன் இழப்பை சமநிலைப்படுத்த, ஏற்றுமதியாளர்களுக்கு நிதி நிவாரணம் அல்லது ஊக்கத்தொகைகள் வழங்கப்பட வேண்டும்.
பருத்தி நூல் வரி குறைப்பு உற்பத்திச் செலவை குறைக்கும் வகையில், பருத்தி நூலுக்கான வரியை குறைத்து, இந்திய பின்னலாடைகள் சர்வதேச சந்தைகளில் போட்டித்திறனுடன் நிலைத்திருக்க வேண்டும். கடன் மறுசீரமைப்பு மற்றும் வட்டி சலுகை எம்எஸ்எம்இ நிறுவனங்களின் நிதிச் சுமையை குறைக்கும் வகையில், குறைந்தது 6 மாதம் கடன் தவணை ஒத்திவைக்கப்பட்டு, நிலுவைக் கடன்களுக்கு வட்டி சலுகையும் வழங்கப்பட வேண்டும். மேலும், அமெரிக்கா தவிர பிற நாடுகளுக்கு ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்தும் முயற்சிகளை ஒன்றிய அரசு தீவிரப்படுத்த வேண்டும். அதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
