புதுடெல்லி: பீஜிங்கின் நிபந்தனைகளின் பேரில் சீனாவுடன் உறவுகளை இயல்பாக்க இந்தியா கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது: அடிக்கடி விமானத்தில் அடிக்கடி பறக்கும்(அடிக்கடி பொய் சொல்லும்) பிரதமர் மோடி ஜப்பான், சீனா நாடுகளுக்கு சென்றுள்ளார்.
மோடியின் சீன பயணம் இந்தியாவுக்கு சில கணக்குகளை முன்வைக்கும் தருணம். சீனாவுடனான உறவுகளை இயல்பாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவர்களின் நிபந்தனைகளின் பேரில் சீனாவும், இந்திய-அமெரிக்க உறவுகளில் ஏற்பட்டுள்ள சரிவை சாதகமாக்கி கொள்ள முயற்சிக்கிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது,பாகிஸ்தானின் கூட்டாளியாக சீனா தொடர்ந்து நிற்கும் என சீன அமைச்சர் வாங் யீ தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தானுக்கு சீனா உதவியதாக இந்திய ராணுவமே தெரிவித்தது. பிரதமர் வெளிநாடு புறப்பட்டு சென்றாலும் நீண்ட காலமாக பொறுமையாக இருக்கும் மணிப்பூர் மக்கள் 2023,மே மாதம் தொடங்கி நடந்த கலவரத்தின் காயங்களை குணப்படுத்துவதற்கு பிரதமர் வருவார் என இன்னும் காத்திருக்கிறார்கள். ஆனால் பிரதமர் மிக எளிதாக மணிப்பூரை கைகவழுவி விட்டார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
