×

பீகாரில் ஒரே வீட்டில் முழு கிராமமும் வசிக்கிறதா? தேர்தல் ஆணையம் மீது ராகுல் புதிய குற்றச்சாட்டு

பாட்னா: மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையை நடத்தி வருகின்றார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பதிவை அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதில், ‘‘தேர்தல் ஆணையத்தின் மாயாஜாலத்தை பாருங்கள். ஒரு முழு கிராமமும் ஒரே வீட்டில் குடியேறி உள்ளது.

பராசட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கயா மாவட்டத்தில் நிதானி கிராமத்தில் ஒரு வாக்குசாவடியின் மொத்தமுள்ள 947 வாக்காளர்களும் ஆறாவது எண் வீட்டிலேயே வசிப்பவர்கள் என்று காட்டப்பட்டுள்ளது. இது ஒரு கிராமத்தை பற்றியது. மாநில மற்றும் தேசிய அளவில் நடக்கும் முறைகேடுகளின் அளவை நம்மால் கற்பனை செய்து பார்க்க மட்டுமே முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பீகார் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் கயா மாவட்ட கலெக்டரின் எக்ஸ் தள பதிவில் வெளியிடப்பட்ட விளக்கத்தை வெளியிட்டுள்ளது. இதில்‘‘கிராமங்கள் அல்லது குடிசைப் பகுதிகளில் வீடுகளில் உண்மையான வரிசை எண்கள் இல்லாத இடங்களில் கற்பனையான வீட்டு எண் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை சேர்க்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக இது செய்யப்படுகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Bihar ,Rahul Gandhi ,Election Commission ,Patna ,Lok Sabha ,Congress party ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...