×

கோயில் நிதியை கல்விக்கு பயன்படுத்த தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

புதுடெல்லி: பக்தர்கள் மூலம் கொடுக்கப்படும் கோயில் நிதியை மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது. குறிப்பாக அரசு திட்டங்களுக்கு கோயில் நிதியை பயன்படுத்தும் விதமாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து வந்தது. மேலும் இதுதொடர்பாக வழக்குகளும் நீதிமன்றங்களில் இருந்து வருகிறது. குறிப்பாக கோவில் நிதியில் வணிக வளாகம், கல்வி நிறுவனம், திருமண மண்டபங்கள் அமைக்கும் அறிவிப்பை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டிருந்து.

இதேப்போன்று சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தும் அறிவிப்பை எதிர்த்து டி.ஆர்,ரமேஷ் தொடர்ந்திருந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக டி.ஆர்.ரமேஷ் தொடந்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘‘தற்போது கல்லூரி கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடமானது கொளத்தூர் சோமநாதர் ஆலயத்தின் இடமாகும்,மேலும். கோயில் நிதியை கல்லூரிக்காக பயன்படுத்துகின்றனர். எனவே கல்லூரி கட்டடம் கட்ட அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர் மிஷா ரோத்தகி, அதேப்போன்று தமிழ்நாடு அறநிலையத்துறை தரப்பில் இருந்து ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆகியோர் தரப்பு வாதத்தில்,‘‘கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது மிகவும் பயன் உள்ள ஒரு திட்டமாகும். மாணவர்களின் எதிர்காலம் இதில் அடங்கி உள்ளது.

இவை அனைத்தையும் அடிப்படையாக கொண்டு தான் உயர்நீதிமன்றம் அரசாணைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்திருந்தது. குறிப்பாக சோம்நாத் ஆலயத்தின் இடத்தில் கட்டடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அந்த இடத்திற்கான வாடகையாக ரூ.3 லட்சத்து 19 ஆயிரத்தை இந்து சமய அறநிலையத்துறையானது கோயிலுக்கு வழங்கி வருகிறது.

எனவே சம்மந்தப்பட்ட இடத்தை பொறுத்தவரைக்கும் வாடகை இல்லாமல் இலவசமாக அந்த நிலத்தை பயன்படுத்தவில்லை.மேலும் கபாலீஸ்வரர் திருக்கோயிலின் சார்பில் தான் கல்லூரியானது அமைக்கப்பட இருக்கிறது. கல்விக்காகத்தான் இந்த இடத்தை பயன்படுத்துகிறோம் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு தரப்பின் வாதங்களை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், ‘‘கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்துவதில் எந்தவித தவறும் கிடையாது. அதற்கு தடையும் இல்லை.

இது ஒரு மக்களுக்கான திட்டம் தானே. இது மாணவர்களின் எதிர்காலத்திற்கான ஒன்றாகும். குறிப்பாக இதுபோன்ற தேவையில்லாத மனுக்களை பக்தர்களாக இருக்கும் நீங்கள் தாக்கல் செய்ய முகாந்திரமே கிடையாது. கல்விக்காக கட்டணம் அமைப்பதோ அல்லது நிதியை பயன்படுத்துவதில் எந்தவித தவறும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,New Delhi ,Tamil Nadu government ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...