×

அதிமுக கட்சி விதிகளை எதிர்த்து வழக்கு தொடர அனுமதித்த தனி நீதிபதி உத்தரவு ரத்து: உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு

சென்னை: அதிமுக கட்சி விதிகளை திருத்தம் செய்ததை எதிர்த்தும், உட்கட்சி தேர்தலை எதிர்த்தும் கட்சி உறுப்பினர்கள் எனக் கூறி ராம்குமார் ஆதித்தன், கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் ஆகியோர் அதிமுக தொண்டர்கள் சார்பில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், கட்சி விதிகள் திருத்தத்துக்கு எதிராக வழக்கு தொடர இருவருக்கும் அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை, நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் அமர்வு விசாரித்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுரேன் பழனிச்சாமி மற்றும் ராம்குமார் ஆகியோர் அதிமுக உறுப்பினர்களே இல்லை என்பதால், வழக்கு தொடர அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை ஏற்று, தொண்டர்கள் சார்பில் வழக்கு தொடர சுரேன் பழனிச்சாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோருக்கு அனுமதியளித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Tags : AIADMK ,Court ,Chennai ,Ramkumar Adithan ,K.C. Palaniswami ,Suren ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்