சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2,500 என்ற விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். இதன்மூலம் திமுக அரசின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றியுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார். இதுகுறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் 1.9.2025 முதல் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2545 மற்றும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2500 என்ற விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என்று ஆணையிட்டுள்ளார். இதில் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை குவிண்டால் ஒன்றிற்கு சன்ன ரகத்திற்கு ரூ.156 மற்றும் பொதுரகத்திற்கு ரூ.131 ஆகும். திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு குவிண்டால் நெல்லிற்கு ரூ.2500 வழங்குவோம் என்று குறிப்பிட்டதை நிறைவேற்றியுள்ளோம்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு இன்று (நேற்று) வரை 2024-25 நெல் கொள்முதல் பருவத்தில் 47.97 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ரூ.44,777.83 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையாக மட்டும் ரூ.2,031.29 கோடி வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதமே அக்டோபரில் தொடங்கும் பருவ விலையில் நெல் கொள்முதல் செய்ய முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி, அனுமதி பெற்று 2022-23 ஆண்டு முதல் செப்டம்பரிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வருவதுபோல் இந்த ஆண்டும் செப்டம்பர் முதல் நாளிலிருந்து கொள்முதல் செய்யப்படும்.
வருங்காலங்களில் திறந்த வெளியில் நெல் சேமிக்க வேண்டிய தேவை இருக்காது. இந்த ஆண்டு நெல்வரத்து அதிகமாக வரலாறு காணாத வகையில் இருந்தாலும் எதிர்பாராது அடிக்கடி மழை பெய்தபோதும் நெல்மணிகள் மழையில் நனையாமல் காப்பாற்றப்பட்டுள்ளன. அதேபோன்று வருகிற 2025-26 பருவத்தில் நெல் கொள்முதலை செப்டம்பர் முதல் நாளில் இருந்து தொடங்கிட அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் விரைந்து திறந்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் மையங்களில் இருந்து நேரடியாக அரிசி அரவை ஆலைகளுக்கு நெல் அனுப்பிடவும் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து நெல் விவசாயிகளும் புதிய விலையில் நெல்லை விற்றுப் பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
