- முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்
- திருவண்ணாமலை விளையாட்டு அரங்கம்
- திருவண்ணாமலை
- திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மண்டபம்
*மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கடந்த 26ம் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் 6ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கின்றனர்.
தடகளம், கபடி, கைப்பந்து, நீச்சல், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. அதில், 1.34 லட்சம் பேர் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். மாநிலத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் வீரர்கள் பங்கேற்க பதிவு செய்திருப்பது திருவண்ணாமலை மாவட்டத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முதமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளின் மூன்றாம் நாளான நேற்று ஹாக்கி, கபடி, சிலம்பம், வாலிபால், ஹேண்ட்பால், செஸ், கால்பந்து ஆகிய போட்டிகள் நடந்தது. அதில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
மேலும், போட்டிகளின் தொடர்ச்சியாக இன்று தடகளம், பேட்மிட்டன், கிரிக்கெட், நீச்சல், கோகோ, கேரம் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது. அதில், பள்ளி மாணவிகள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். வரும் 3ம் தேதி முதல் பொதுமக்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகபிரியா முன்னிலையில், உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக முன்னின்று போட்டிகளை நடத்தி வருகின்றனர்.
