×

தமிழகத்தில் பெரிய கோயில்களை பராமரிக்க தேவஸ்தானங்களை அமைப்பதுபற்றி யோசிக்க வேண்டிய தருணம் இது: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களை பராமரிப்பதற்காகவும், பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்துவதற்காகவும் தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கோபுரம் முன்பு 6 கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்ட அறநிலையத் துறை அனுமதியளித்து 2023ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், ராஜகோபுரத்தின் முன்பு வணிக வளாகம் கட்டுவது கோயிலின் விழாக்களுக்கு இடையூறாக அமையும் என்றும் விழா காலங்களில் பக்தர்கள் பங்கேற்க தடையாக இருக்கும் என்றும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வணிக வளாகம் கட்டும் திட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு அறநிலையத் துறைக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, வணிகவளாகம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படப் போவதில்லை என்று அறநிலையத் துறை ஏற்கனவே உத்தரவாதம் அளித்திருந்த நிலையில், ராஜகோபுரம் முன் பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவது குறித்த மாற்றுத் திட்டம் சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் கோரினார்.

இதை ஏற்று இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், அருணாச்சலேஸ்வரர் கோயிலை விட்டு தொலைவில் அரசு புறம்போக்கு நிலங்கள் இருக்கிறதா என்று கண்டறிந்து தெரிவித்தால் அங்கு வணிக வளாகம் கட்டலாம். கோயிலுக்கு அருகில் கோயில் நிலமாக இருந்தாலும் சரி, அரசு புறம்போக்கு நிலமாக இருந்தாலும் சரி எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது.

தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களை பராமரிப்பது, பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்துவது போன்றவற்றுக்காக, தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், திருப்பதி கோயில் பராமரிப்பை உதாரணமாக சுட்டிக்காட்டினர். பின்னர் இந்த வழக்குகளின் விசாரணையை செப்டம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Tamil Nadu ,Department of Religious Affairs ,Chennai ,Madras High Court ,Department of Religious Affairs and Religious Affairs ,Arunachaleswarar temple ,Tiruvannamalai… ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் ஆஜர்..!!