×

1.81 லட்சம் பேர் எழுதிய குரூப் 1 பதவிக்கான முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு: மெயின் தேர்வு டிச.1ம் தேதி தொடக்கம்

சென்னை: சுமார் 1.81 லட்சம் பேர் எழுதிய துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான முதல் நிலை தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மெயின் தேர்வு டிசம்பர் 1ம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 1ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

இதில் துணை கலெக்டர் 28 இடங்கள், போலீஸ் டிஎஸ்பி 7 இடம், வணிகவரி உதவி ஆணையர் 19, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் 7, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 3, தொழிலாளர் நல உதவி ஆணையர் 6 ஆகிய 70 பணியிடங்கள் அடங்கும். பின்னர் இது 78 பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டது. முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 15ம் தேதி நடந்தது.இத்தேர்வை 1 லட்சத்து 81,428 பேர் எழுதினர்.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், ‘‘குரூப் 1 முதல்நிலை தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மை எழுத்து தேர்விற்கு (மெயின் தேர்வு) தற்காலிகமாக 1843 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குரூப் 1 ஏ முதன்மை தேர்வுக்கு 22 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதிவெண் பட்டியல் தேர்வாணைய வலைதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல்நிலை எழுத்து தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் வாயிலாக ஆவணங்களை வருகிற 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை பதிவேற்றம் செய்து மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் எஸ்.டி.வைஷ்ணவி கூறுகையில், ‘‘எங்கள் அகாடமியில் படித்த 306க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மெயின் தேர்வு டிசம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடக்கிறது’’ என்றார்.

Tags : Chennai ,DSP ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...