புதுடெல்லி: ரஷ்ய எண்ணெய் இறக்குமதியால் இந்தியாவுக்கு கிடைக்கும் லாபம் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆண்டுக்கு வெறும் ரூ.22 ஆயிரம் கோடி மட்டுமே லாபம் கிடைப்பதாகவும் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு ரஷ்யாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்குவது முக்கிய காரணமாக இருக்கும் நிலையில் இதுதொடர்பாக சிஎல்எஸ்ஏ எனும் தரகு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: சில ஊடக நிறுவனங்கள் ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதியால் இந்தியாவுக்கு 10 பில்லியன் முதல் 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பலன் கிடைப்பதாக கூறுகின்றன. இது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. உண்மையிலேயே ரஷ்ய எண்ணெயால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு கிடைக்கும் லாபம் வெறும் ரூ.22,000 கோடி (2.5 பில்லியன் டாலர்) மட்டுமே. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீதம்.
கடந்த 2024 நிதியாண்டில் ஒரு பீப்பாய்க்கு 8.5 அமெரிக்க டாலர் (ரூ.725) தள்ளுபடியை ரஷ்யா வழங்கியது. அதாவது சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் 69 டாலராக இருந்த நிலையில் இந்தியா ரஷ்யாவிடம் 60 டாலருக்கு கச்சா எண்ணெய் வாங்கியது. ஆனாலும், ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவு அதிகம். அதே சமயம் 2025ம் நிதியாண்டில் 3 முதல் 5 டாலராக தள்ளுபடி குறைந்த நிலையில் சமீபத்திய மாதங்களில் பீப்பாய்க்கு வெறும் 1.5 டாலர் மட்டுமே தள்ளுபடி தரப்படுகிறது.
தற்போதைய தள்ளுபடியின் படி பார்த்தால், ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மூலம் கிடைக்கும் வருடாந்திர லாபத்தில் 1 பில்லியன் டாலர் குறையக்கூடும். இதுதவிர, தரம் குறைந்த ரஷ்ய கச்சா எண்ணெயை சுத்திகரிக்க அதிக அளவில் வாங்க வேண்டியுள்ளது. எனவே, உண்மையான லாபம் இன்னும் குறையவும் வாய்ப்புள்ளது. எனவே, மலிவு விலையில் கிடைக்கும் ரஷ்ய கச்சா எண்ணெயின் உண்மையான நன்மை ஊடக அறிக்கைகளை விட மிகக் குறைவு. ஒருவேளை இந்தியா ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதை நிறுத்தினால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 90 முதல் 100 டாலர்களாக அதிகரிக்க வாய்ப்புண்டு.
தற்போது 75 டாலரில் உள்ள விலை 100 டாலராகும் பட்சத்தில், உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரிக்கும். உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவிடம் வாங்கும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா அதிகரித்ததன் காரணமாக மட்டுமே சர்வதேச சந்தையில் அதன் விலை அதிகரிக்காமல் உள்ளது. ஆனால் இந்த விவகாரம் தற்போது அரசியல் பிரச்னையாக மாறிவிட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை உண்மையானால், பெரிய அளவில் லாபம் கிடைக்காத ரஷ்யா எண்ணெயை ஒன்றிய அரசு வாங்கி அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி இந்திய ஏற்றுமதியாளர்களை ஏன் வஞ்சிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.
