ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிறுவனரும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருமான சிபு சோரன்(81), உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 4ம் தேதி டெல்லியில் காலமானார். இந்நிலையில் மறைந்த சிபு சோரனுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து ஜார்க்கண்ட் பேரவை மழைக்கால கூட்டத்தொடரில் போக்குவரத்து அமைச்சர் தீபக் பிருவா நேற்று ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.
அந்த தீர்மானத்தில், “ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான சிபு சோரன், ஜார்க்கண்ட் அரசியலை மறுவடிவமைத்துள்ளார். மறைந்த சிபு சோரனுக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்யும் முன்மொழிவை கொண்டு வந்து, அதை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
