×

75 வயது வரம்பு பிரச்னை மோடி ஓய்வு பெற வேண்டும் என்று சொல்லவில்லை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பல்டி

புதுடெல்லி: வயது வரம்பு பிரச்னையில் 75 வயதானதும் நான் ஓய்வு பெறுவேன் என்றோ அல்லது வேறு ஒருவர் 75 வயதை அடையும்போது ஓய்வு பெற வேண்டும் என்றோ நான் ஒருபோதும் சொல்லவில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். பா.ஜவில் 75 வயதானதும் எந்த பதவியில் இருந்தாலும், அவர்கள் பதவி விலகி ஓய்வு பெறுவது வழக்கமாக உள்ளது. பிரதமர் மோடிக்கு வரும் செப்.17 அன்று 75 வயது பிறக்கிறது. இதுதொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், 75 வயதானதும் தலைவர்கள் பதவி விலகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்றார். அவர் பிரதமர் மோடியை குறிவைத்துதான் இவ்வாறு பேசியதாக தகவல் வெளியானது. அதை மோகன்பகவத் நேற்று மறுத்துள்ளார். ஏனெனில் பிரதமர் மோடி பிறந்த தினமான செப்.17க்கு 6 நாட்களுக்கு முன்பு, செப்.11ல் பிறந்த மோகன்பகவத்திற்கும் 75 வயது பிறக்கிறது. எனவே ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் அடிப்படையில் அவரும் பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து அவர் கூறுகையில்,’ நான் ஓய்வு பெறுவேன் என்றோ அல்லது வேறு யாராவது 75 வயதை அடையும்போது ஓய்வு பெற வேண்டும் என்றோ நான் ஒருபோதும் சொல்லவில்லை. வாழ்க்கையில் எந்த நேரத்திலும் ஓய்வு பெற நாங்கள் தயாராக இருக்கிறோம், சங்கம் எங்களை வேலை செய்ய விரும்பும் வரை வேலை செய்யத் தயாராக இருக்கிறோம். மறைந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோரோபந்த் பிங்கிளே 75 வயது பற்றி பேசியதைத்தான் நான் பேசினேன். ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு வேலை வழங்கப்படுகிறது. ஆனால் ஆர்எஸ்எஸ் என்ன சொல்கிறதோ அதை நாங்கள் சொல்வோம்’ என்றார்.

* 3 குழந்தைகள் பெற வேண்டும்
மோகன் பகவத் கூறுகையில், ‘மக்கள்தொகை மாற்றம் மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாடு சமூக கட்டமைப்பை மாற்றி வருகிறது. மூன்றுக்கும் குறைவான பிறப்பு விகிதம் கொண்ட சமூகங்கள் மெதுவாக அழிந்து வருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே ஒவ்வொரு இந்திய தம்பதியினரும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். சரியான வயதில் திருமணம் செய்துகொண்டு மூன்று குழந்தைகளைப் பெற்றெடுப்பது பெற்றோரும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்கிறது என்று மருத்துவர்கள் என்னிடம் கூறியுள்ளனர். மக்கள் தொகை ஒரு வரமாக இருக்கலாம், ஒரு சுமையாகவும் இருக்கலாம். அதே நேரத்தில் போதுமான அளவு இருப்பதையும் உறுதி செய்ய, ஒவ்வொரு குடும்பமும் மூன்று குழந்தைகளைப் பெற வேண்டும், ஆனால் அதை விட அதிகமாக இருக்கக்கூடாது. இது அவர்களின் வளர்ப்பு முறையாக இருப்பதை உறுதி செய்வதாகும் ’ என்றார்.

* பாஜ தலைவர் யார்?
பா.ஜ புதிய தலைவர் நியமனம் தாமதம் குறித்த கேள்விக்கு மோகன்பகவத் கூறுகையில், ‘பா.ஜ புதிய தேசிய தலைவர் யார் என்பது பற்றி இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. அதை நாங்கள் முடிவு செய்யவும் விரும்பவில்லை. நாங்கள் முடிவு செய்தால் அதற்கு இவ்வளவு நேரம் எடுக்குமா என்ன? எனவே புதிய தலைவர் தேர்வுக்கான உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இரு அமைப்புகளுக்கும் இடையே போராட்டம் இருக்கலாம், ஆனால் எந்த சண்டையும் இல்லை. இரு அமைப்புகளின் குறிக்கோள்களும் ஒன்றே’ என்றார்.

Tags : Modi ,RSS ,Mohan Bhagwat ,New Delhi ,BJP… ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...