- கவர்னர்
- ஜனாதிபதி
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- திரௌபதி முர்மு
- தலைமை நீதிபதி
- பி. ஆர் கவாய்
- உச்ச நீதிமன்றம்...
புதுடெல்லி: மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் விதித்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று ஐந்தாம் நாளாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,‘‘மூன்று மாதத்திற்குள்ளாக மசோதா மீது முடிவெடுக்கவில்லை என்றால், அதற்கான காரணத்தை கூற வேண்டும் என குடியரசு தலைவருக்கு நீதிமன்றம் எப்படி கூற முடியும். குடியரசு தலைவர் முடிவை அறிவிக்கவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என்று எப்படி உத்தரவிட முடியும். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான உத்தரவு. இதேபோன்று, ஆளுநருக்கும் ஒருபோதும் நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க முடியாது. ஆளுநர் ஒன்றும் ஒன்றிய அரசு கிடையாது, ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நபர். அவரை குடியரசு தலைவர்தான் நியமனம் செய்கிறார்” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘‘மசோதாவில் இருக்கும் சட்ட பிரச்னைகள் மற்றும் சட்ட நடைமுறை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்ப அதிகாரம் உள்ளது. இந்த வழக்கில் தற்போது இருக்கும் பிரதான கேள்வி என்னவென்றால், மாநில சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதா மீது ஆளுநர் எத்தனை காலம் முடிவெடுக்காமல் அப்படியே நிறுத்தி வைத்திருக்க முடியும்? அதற்கு ஒன்றிய அரசின் பதில் என்ன? அரசியல் நிர்ணய சபை விவாதத்தில் முதலில் ஆறு வாரங்களில் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்று விவாதம் நடத்தப்பட்டது. பின்னர் அதுகூடிய விரைவில் என்று குறிப்பிடப்பட்டது.
அதன் நோக்கம் மசோதா அவசரமானது, அதனால் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்பதே ஆகும். இந்த விவகாரத்தில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களின் முடிவையும், எதிர்பார்ப்பையும் நாம் எப்படி புறக்கணிக்க முடியும்? ஆளுநர்கள் ஆறு மாதம், ஒரு வருடம் என்று மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது. ஆளுநரிடம் பதில் கேட்பதில் தவறு ஒன்றும் கிடையாது. ஏனெனில் ஆளுநர் ஒன்றிய அரசை பிரதிநிதித்துவப்படுத்துபவர்தான். ஆனால் அவர் ஒன்றிய அரசை பிரதிநிதித்துவபடுத்துபவர் இல்லை என்ற ஒன்றிய அரசின் வாதங்களை ஏற்க முடியாது. ஆளுநர் ஒன்றிய அரசின் பிரதிநிதிதான், அவரிடம் அதிகாரத்தை ஒன்றிய அரசுதான் ஒப்படைத்துள்ளது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவரின் விளக்க கடிதத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி மற்றும் இதர மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தில், “அரசியல் சாசனம் 200ல் இருக்கக்கூடிய மூன்று வழிமுறைகள்தான் ஆளுநருக்கு மசோதா மீது முடிவெடுக்க வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மசோதா மீது ஆளுநர் முடிவெடுக்கலாம் அல்லது மசோதாவை சட்டப்பேரவைக்கு திரும்ப அனுப்பலாம் அல்லது மசோதாவை குடியரசுத் தலைவர் முடிவுக்காக அனுப்பி வைக்கலாம். இந்த மூன்று முடிவுகளை தவிர வேறு முடிவுகள் எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.
அதாவது அரசியல் சாசன பிரிவு 200ன் படி ஆளுநருக்கு நான்காவது வாய்ப்பு எதுவும் கிடையாது. அதிலும் குறிப்பாக, சட்டப்பேரவையால் இரண்டாவது முறையாக மறு நிறைவேற்றம் செய்து அனுப்பப்படக்கூடிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும். ஏனெனில் அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். இதுதான் அரசியல் சாசனம் வகுத்துள்ள வழிமுறை ஆகும். மேலும், ஆளுநருக்கு தனது அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றுவதில் எந்த தனிப்பட்ட விருப்புரிமையும் இல்லை. அரசியலமைப்பால் அது வழங்கப்படவில்லை.
எனவே ஆளுநர் ஏதோ ஒரு காரணத்துக்காக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளார் என்று கூற முடியாது. மேலும், அனுமானத்தின் அடிப்படையில் எந்தவொரு செயலையும், முடிவையும் ஆளுநர் எடுக்க முடியாது. அரசியல் சாசனம் வழங்கி உள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அதன் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டுதான் ஆளுநர் செயல்பட முடியும். ஆளுநர் என்பவர் சட்டப்பேரவை நடைமுறையில் ஒரு பகுதியாக இருக்கிறாரே தவிர, பேரவையின் ஒரு அங்கமாக ஆளுநர் கிடையாது என்பதை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஆளுநரை பொறுத்தவரை, அமைச்சரவையின் ஆலோசனையின் படியும், உதவியின்படியும்தான் செயல்பட வேண்டும்.ஒன்றிய அரசின் வாதங்கள் அனைத்தும், ஆளுநரை மாநில முதலமைச்சருக்கு மேலானவர் என்று கட்டமைக்கும் வகையிலேயே இருக்கிறது. எனவே அதனை நிராகரிக்க வேண்டும்.
குறிப்பாக விருப்புரிமை என்பது பிரச்னைகளுக்கு மட்டுமே வழிவகுக்கும். ஆளுநர் ஒன்றும் நீதிபதி கிடையாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திராவை சேர்ந்த இருபதுக்கும் மேலான மசோதாக்கள் நான்கு ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போதும் மூன்று ஆண்டுகள் வரை மசோதாக்கள் கிடப்பில் உள்ளன. அதாவது இரண்டு ஆண்டுகள் ஆளுநர் நிறுத்தி வைத்தார். பின்னர் ஓராண்டுக்கு மேல் குடியரசுத் தலைவர் முன்பு கிடப்பில் உள்ளது. இதில் உண்மை என்னவென்றால் அரசியலமைப்பின் அடிப்படையில் அரசுக்கு சட்ட அறிவுரை வழங்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது” என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், ‘‘ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பு பாலமாக உள்ளவர். அதைத்தான் அரசியல் சாசனத்தை வடிவமைத்து கொடுத்தவர்கள் மனதில் வைத்து வழங்கி உள்ளனர். ஒருவேளை, பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதா அரசியலமைப்பு விதிகளை மீறும் வகையில் இருந்தாலும்,அமைச்சரவை ஒப்புதல் அளிக்க ஆளுநரை வலியுறுத்தும்போது, அதற்கு ஒப்புதல் அளிப்பதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை. இதைதான் குடியரசுத் தலைவரின் விளக்க கடிதத்துக்கு எதிரான மனுதாரர்கள் வாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர்” என்று தெரிவித்து, வழக்கு விசாரணையை வரும் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
