×

விசாரணைக்கு சென்ற வாலிபர் சாவு: 4 போலீசார் மீது வழக்குப்பதிவு; கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்

மதுரை, டிச.15: மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்தவர் ஜெயா. இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என்னுடைய 17 வயது மகனை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஓரிரு நாட்கள் கழித்து எனது மகன் உடலில் காயங்களுடன் வந்தான். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். போலீசார் தாக்கியதில்தான் என் மகன் படுகாயமடைந்து இறந்துவிட்டார். இதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுத்து, இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் மகன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றியும், ஐபிஎஸ் அதிகாரி விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் ஐகோர்ட் மதுரை கிளை கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.அதன்படி இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஐபிஎஸ் விசாரித்து மதுரை மாவட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குற்றப்பத்திரிகை நகலை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யும்படி கடந்த 10ம் தேதி நீதிபதி நிஷாபானு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிஷாபானு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மகன் இறந்த வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மனுதாரர் மகன் இறந்த வழக்கில் அந்த சமயத்தில் பணியில் இருந்த 4 போலீசார் மீதும்  வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் பல்வேறு உத்தரவுகளை ஐகோர்ட் நீதிபதி சேஷசாயி பிறப்பித்துள்ளார். இனியும் அவர் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிப்பதுதான் சரியாக இருக்கும். எனவே இந்த வழக்கை நீதிபதி சேஷசாயி முன்பு பட்டியலிட ஐகோர்ட் பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags : teenager ,Death ,policemen ,trial ,court ,
× RELATED முள்ளக்காடு அருகே கோயில் திருவிழாவில் வாலிபர் மீது தாக்குதல்‘