கரூர், டிச. 15: கரூர் ராமனுஜர் நகர்ப்பகுதியில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தொட்டி வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட ராமனுஜர் நகர்ப்பகுதியை சுற்றிலும் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் இந்த பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. தற்போது இந்த தொட்டி கட்டப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது. இருப்பினும் தொட்டி வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தொட்டி வளாகத்தை சுற்றிலும் படர்ந்துள்ள செடிகளை அகற்றி சுற்றுச்சுவர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இந்த பகுதிக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
