ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த எல்கேஜி மாணவனை வெறிநாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள பகுதியை சேர்ந்த தொழிலாளியின் 3 வயது மகன் அங்குள்ள பள்ளியில் எல்கேஜி படிக்கிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில் வீட்டின் வெளியே மாணவன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த தெருநாய் மாணவனை கடித்து குதறியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் நாயை விரட்டிவிட்டு மாணவனை மீட்டனர். பின்னர் உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் அவற்றை பிடித்துச்செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
