வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசைப் பெறும் முயற்சியாக, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், இந்தியா இதனை தொடர்ந்து திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது அதிபர் டிரம்ப், இந்தியா -பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக மீண்டும் தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் கூறுகையில்,\\” நான் மிகவும் அற்புதமான மனிதரான நரேந்திர மோடியுடன் பேசினேன். நான் நரேந்திரமோடியிடம் கேட்டேன். உங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன தான் நடக்கிறது? என்று கேட்டேன். வெறுப்பு மிகப்பெரியது. இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான வெறுப்புணர்வு நிலவியது. பல நூறு ஆண்டுகளாக வெவ்வேறு பெயர்களில் தொடர்ந்து வருகிறது. நான் மோடியிடம், ‘உங்களுடன் நான் எந்த வர்த்தக ஒப்பந்தமும் செய்ய விரும்பவில்லை. நீங்கள் இருவரும் அணு ஆயுதப் போரில் ஈடுபடப் போகிறீர்கள்’ என்று எச்சரித்தேன். மேலும், ‘என்னை மீண்டும் நாளை அழையுங்கள்; இல்லையென்றால், உங்கள் தலை சுற்றும் அளவுக்கு மிக அதிக வரிகளை விதிப்பேன்’ என்றும் கூறினேன். ஒரு நாள் அவகாசம் கொடுத்த நிலையில், சுமார் ஐந்து மணி நேரத்திற்குள் எல்லாம் போர் முடிவுக்கு வந்துவிட்டது.
இப்போது மீண்டும் பதற்றம் தொடங்கலாம். ஆனால் அப்படி நடந்தால் அதை நான் தடுத்து நிறுத்துவேன். இதுபோன்ற சம்பவங்கள் நடக்க நாம் அனுமதிக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலை டிரம்ப் தலையிட்டு தீர்த்து வைத்ததாக அவர் தொடர்ந்து கூறி வருவது, இந்திய அரசியலிலும் பெரும் சர்ச்சைகளை எழுப்பி உள்ளது. அமெரிக்கா இந்தியா மீது விதித்த 25 சதவீத கூடுதல் வரிவிதிப்பானது அமலுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அதிபர் டிரம்பின் கருத்துக்கள் வந்துள்ளன.
* டிரம்ப்புக்கு பயந்த மோடி ராகுல் விமர்சனம்
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் நேற்று வாக்காளர் உரிமை யாத்திரையில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘‘ அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று என்ன சொல்லி இருக்கிறார் என உங்களுக்கு தெரியுமா? இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் போர் ஏற்பட்ட பதற்றமான சமயத்தில், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டிரம்ப், 24 மணி நேரத்திற்குள் போரை நிறுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். அவர் 24 மணி நேரம் கெடு கொடுத்தாலும், டிரம்ப்புக்கு பயந்து அடுத்த 5 மணி நேரத்தில் மோடி போரை நிறுத்தி விட்டார் என்று விமர்சித்தார்.
