நாகர்கோவில்: குமரி மாவட்ட கடலோர பகுதியில் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய கடல் சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் வெயில் கொளுத்தி வருகிறது. பகல் வேளையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மாவட்டத்தில் நேற்றும் பகல் வேளையில் அதிக அளவில் வெப்ப நிலை பதிவாகி இருந்தது. இந்தநிலையில் மாவட்டத்தில் ஆகஸ்ட் 29ம் தேதி(நாளை) இரவு 8.30 வரை நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதியில் 2.3 முதல் 2.5 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல்சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக மஞ்சள் எச்சரிக்கையும் இப்பகுதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
