புதுடெல்லி: குஜராத்தில் சில பெயர் அறியப்படாத கட்சிகள் ரூ.4,500 கோடி நன்கொடை பெற்றது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்குமா அல்லது அதற்கும் பிரமாண பத்திரம் கேட்குமா என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
குஜராத்தில் கடந்த 2019-20 முதல் 2023-24 வரையிலும் பெயர் அறியப்படாத பிரபலமில்லாத பதிவு செய்யப்பட்ட 10 அரசியல் கட்சிகள் ரூ.4,500 கோடி வரை நன்கொடை பெற்றதாக இந்தி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் நடந்த 2019 மற்றும் 2024 மக்களவை தேர்தல் மற்றும் 2022 சட்டப்பேரவை தேர்தல்களில் 10 கட்சிகளும் மொத்தம் 43 வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தி உள்ளன.
அவற்றின் தேர்தல் அறிக்கைகளில் வெறும் ரூ.39.02 லட்சம் செலவுகள் காட்டப்பட்டுள்ளன. ஆனால், தணிக்கை அறிக்கைகள் ரூ.3,500 கோடி வரை செலவுகளை பதிவு செய்துள்ளதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியை தனது எக்ஸ் தளத்தில் நேற்று பகிர்ந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ‘‘குஜராத்தில் சில பெயர் அறியப்படாத கட்சிகள் ரூ.4,500 கோடி தேர்தல் நிதி பெற்றுள்ளன. இக்கட்சிகள் பெரும்பாலும் தேர்தலில் போட்டியிடவே இல்லை. செலவும் செய்ததில்லை.
இக்கட்சிகளை யார் நடத்துகிறார்கள்? அவற்றின் பணம் எங்கே போனது? இதையெல்லாம் தேர்தல் ஆணையம் விசாரிக்குமா? பிரமாண பத்திரத்தை நம்மிடம் கேட்குமா? அல்லது இந்த தரவுகளை மறைக்கும் வகையில் சட்டத்தையே மாற்றிவிடுமா?’’ என தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடி உள்ளார். முன்னதாக, கர்நாடகாவில் வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், அது தொடர்பாக ராகுல் காந்தி பிரமாண பத்திரம் தர வேண்டும் அல்லது தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென தேர்தல் ஆணையம் அவரை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
