சென்னை: கலைமகள் சபா நிதி நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகளில் எத்தனை ஆக்கிரமிப்பில் உள்ளன என்று அறிக்கை தருமாறு சிறப்பு அதிகாரியான பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலைமகள் சபா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்கும் வகையில், நிறுவனத்துக்கு சொந்தமான 3,888 சொத்துகளை அடையாளம் கண்டு அறிக்கை அளிக்குமாறு சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 33 மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துகள் குறித்து ஏற்கனவே 7 மாவட்ட கலெக்டர்கள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவை, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய ஏழு மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் கலைமகள் சபா நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அடுத்த விசாரணையின் போது, மேலும் மூன்று மாவட்டங்களின் ஆட்சியர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும், மீதமுள்ள மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் செப்டம்பர் 4ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் தெரிவித்தார். இதையடுத்து, கலைமகள் சபா நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகளில் எத்தனை ஆக்கிரமிப்புகளில் உள்ளன? எத்தனை சொத்துக்களில் ஆக்கிரமிப்புகள் இல்லை? என்பது குறித்து இரு விரிவான அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு கலைமகள் சபா சிறப்பு அதிகாரியான பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
