×

ஜம்முவில் வைஷ்ணவி தேவி கோயில் பாதையில் நிலச்சரிவு மேக வெடிப்புக்கு 19 பேர் பலி: இமாச்சல், பஞ்சாப் மாநிலங்களிலும் பேரழிவு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கனமழை பெய்து வரும் நிலையில் மாதா வைஷ்ணவி தேவி கோயில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பக்தர்கள் உள்பட மாநிலம் முழுவதும் மொத்தம் 19 பேர் பலியானார்கள். ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகவே தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளில் அபாய அளவை தாண்டி வௌ்ள நீர் கரை புரண்டு ஓடுகிறது.

இந்த நிலையில் ஜம்முவில் நேற்று காலை மேகவெடிப்பு ஏற்பட்டது. அங்கு 9 மணி நேரத்தில் 25 செ.மீ அதி கனமழை பதிவானது. மேகவெடிப்பு காரணமாக ஜம்மு ஸ்ரீநகர் மற்றும் கிஷ்த்வார்-தோடா தேசிய நெடுஞ்சாலைகள் நிலச்சரிவு, வௌ்ளத்தால் சேதமடைந்துள்ளன. இதனால் இந்த நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கண்டோ மாவட்டத்தில் இரண்டு பேர், தாத்ரியில் ஒருவர் என மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 4 பேர் பலியாகி விட்டனர். 15 வீடுகளும், 4 பாலங்களும் சேதமடைந்துள்ளன.

பல இடங்களில் உயரமான பகுதிகளில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் உள்பட உள்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன. கதுவா மாவட்டத்தின் ரவி ஆற்றங்கரையோரம் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜம்முவில் உள்ள அனைத்து ஆறுகளிலும் அபாய அளவை தாண்டி வௌ்ள நீர் பாய்கிறது. ஜம்மு பகுதி முழுவதும் பாறைகள், மரங்கள் சரிந்து விழுந்தன. வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பக்தர்கள் யாத்திரையாக சென்று கொண்டு இருந்தனர்.

அந்த பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பக்தர்கள் சிக்கி பலியாகி விட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதனால் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் யாத்திரை நிறுத்தப்பட்டது. ஜம்மு முழுவதும் ஏற்பட்ட பேரழிவால் அங்குள்ள செல்போன் கோபுரங்கள் மற்றும் மின் கம்பங்கள் அனைத்தும் சரிந்து தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இமயமலையில் பல இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் தண்டவாளத்தில் மண், பாறை விழுந்து பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. கத்ரா, ஜம்மு, உதம்பூர் செல்லும் மற்றும் வரும் 18 ரயில்களை வடக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. ஜம்முவில் உள்ள பல பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இமாச்சல், பஞ்சாப்: ஜம்மு மட்டுமல்லாமல் இமாச்சல், பஞ்சாப் மாநிலத்திலும் பெரு மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பல வீடுகள், கட்டிடங்கள் சரிந்துள்ளன. பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சக்கி நதியில் ஏற்பட்ட கடுமையான மண் அரிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பதான்கோட்டிலிருந்து இமாச்சலப் பிரதேசத்தின் காந்த்ரோரிக்கு ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு மேக வெடிப்பு, 12 திடீர் வெள்ளப்பெருக்கு நேற்று ஏற்பட்டது. இரண்டு பெரிய நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன. மணாலி முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.

Tags : Vaishnavi Devi ,Jammu ,Himachal, Punjab ,Mata Vaishnavi Devi temple ,Jammu and ,Kashmir ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்