×

வியட்நாமை புரட்டி போட்ட கஜிகி சூறாவளி: 3 பேர் உயிரிழப்பு

ஹனோய்: வியட்நாமில் வீசிய கஜிகி சூறாவளியில் சிக்கி 3 பேர் பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடந்த இருதினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியட்நாம் நாட்டில் கஜிகி என பெயரிடப்பட்ட வெப்ப மண்டல புயல் தாக்கியது. மணிக்கு 117 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தலைநகர் ஹனோய் உள்பட பல முக்கிய நகரங்கள் வௌ்ளக்காடாகின.

கனமழை காரணமாக வீடி இடிந்து விழுந்ததில் 90 வயது முதியவர் மற்றும் மழையால் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உள்பட 3 பேர் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் பிற்பகல் கஜிகி சூறாவளி கரையை கடப்பதற்கு முன்பாகவே, ஹோவா, குவாங் ட்ரை, ஹியூ மற்றும் டானாங் ஆகிய மாகாணங்களில் அபாயகரமான 1,52,000 வீடுகளில் தங்கியிருந்த சுமார் 6 லட்சம் மக்களை வௌியேறுமாறு வியட்நாம் அரசு உத்தரவிட்டிருந்தது.

ஹோவா, குவாங் ட்ரை மாகாணங்களில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கஜிகி சூறாவளி, கனமழையால் 7,000 வீடுகள், 28,000 ஹெக்டேர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளன. இதைத்தொடர்ந்து சூறாவளி பாதித்த பகுதிகளில் 16,500 ராணுவ வீரர்கள், 1,07,000 துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Hurricane Kajiki ,Vietnam ,Hanoi ,Southeast Asian ,Kaziki ,
× RELATED வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இந்திய...