×

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோர போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்க கூடாது: தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்

சென்னை: சாலையோரங்களில் பொதுக்கூட்டம் நடத்துவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும், தொடர்ச்சியாக 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்க முயலும் அதிமுகவினரை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் கடந்த 18ம் தேதி எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி பிரதான சாலையில் பிரசாரம் மேற்கொண்டார். அந்த சமயத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், நோயாளியை ஏற்றுவதற்காக வண்டியை அதன் வழியாக இயக்கினார். இதை பார்த்த எடப்பாடி, ஆள் இல்லாமல் ஏன் ஆம்புலன்ஸ் கொண்டு வந்தாய் எனவும், கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், ‘ஓட்டி வரும் டிரைவர் அதில் நோயாளியாக போகிற நிலைமை வரும்’ என மிரட்டல் விடுத்தார்.

இதை கண்டித்தும், எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கடந்த 22ம் தேதி தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் தமிழ்நாடு 108 அவசர ஊர்த்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருச்சி துறையூரில் கடந்த 24ம் தேதி நடந்த எடப்பாடி பொதுக்கூட்டத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவரை அதிமுகவினர் தாக்கினர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பெயரில் அதிமுகவினர் தாக்குதல் நடத்தி வருவைதை கண்டித்து தமிழ்நாடு 108 அவசர ஊர்த்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, தொடர்ச்சியாக 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களை அச்சுறுத்தி தாக்கி வரும் அதிமுகவினர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தமிழ்நாடு மருத்துவத்துறை சார்ந்த நபர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள்(வன்முறை தடுப்பு மற்றும் உடைமை சேதார தடுப்பு சட்டம்-2008) கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது. மேலும், ஆர்ப்பாட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள், தமிழகம் முழுவதும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோர போராட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறை டிஜிபிக்கும் ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tamil Nadu ,108 Ambulance Workers' Progress Association ,Chennai ,Tamil Nadu government ,AIADMK ,Tamil Nadu 108 Ambulance Workers' Progress Association ,Vellore ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்