×

66,018 புதிய தொழில் முனைவோருக்கு ரூ.5490.80 கோடி கடன்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: சென்னை, கிண்டி, சிட்கோ அலுவலக வளாகத்தில் நேற்று குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் மாவட்ட தொழில் மையங்களின் பொது மேலாளர்களுடன் துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள், மகளிர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதிக எண்ணிக்கையில் கடன் வழங்க வேண்டும். கடந்த 2023-24ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் புதியதாக தொடங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் இதுவரை 2,970 பயனாளிகளுக்கு ரூ.324 கோடி மானியத்துடன் ரூ.581 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் இதுவரை 3,452 பயனாளிகளுக்கு ரூ.13.45 கோடி மானியத்துடன் ரூ.64.24 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம், வேலை இல்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில்கள் முறைபடுத்துதல் திட்டம் உள்ளிட்ட 6 வகையான சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில் 66,018 பயனாளிகளுக்கு ரூ.5,490.80 கோடி கடன் வழங்கப்பட்டு அரசின் வாயிலாக ரூ.2,133.26 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எம்எஸ்எம்இ துறை சார்பில் ரூ.63,573.11 கோடி முதலீடு செய்யும் வகையில் 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,610 நிறுவனங்கள் ரூ.27,312.26 கோடி முதலீடு செய்து உற்பத்தியை தொடங்கியுள்ளன. இதன்மூலம் 1,02,061 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து திட்டங்களிலும் இலக்கினை எய்திடும் வகையில் துரிதமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை செயலாளர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழக முதன்மை செயலாளர் ஆ.கார்த்திக், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் இல.நிர்மல்ராஜ் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Tha.Mo.Anparasan ,Chennai ,Micro, Small and Medium Enterprises ,CIDCO ,Guindy, Chennai ,
× RELATED திருநெல்வேலியில் பொருநை...