×

கோரிக்கையை வலியுறுத்தி பாதயாத்திரை சென்ற அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் இடமாற்றத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு மருத்துவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மேட்டூரில் இருந்து சென்னைக்கு பாதயாத்திரை மேற்கொண்டதற்காக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறுசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பெருமாள் பிள்ளை சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி கடந்த ஜூன் 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை பாதயாத்திரை மேற்கொண்டார்.

இந்நிலையில், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றி வந்த அவரை, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதைடுத்து, தனது பணியிட மாற்றத்தை ரத்து செய்யக்கோரி பெருமாள் பிள்ளை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், ஏற்கனவே, இதே விவகாரம் தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் உள்ள நிலையில், தன்னை பணியிடம் மாற்றம் செய்தது தன்னிச்சையானது. எனவே, தனது பணியிட மாற்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags : Government Doctors Association ,High Court ,Tamil Nadu government ,Chennai ,Chennai High Court ,Mettur ,Central Government ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...