சென்னை: காவல்துறை சிறப்பு எஸ்ஐக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா மற்றும் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்கள் மீது பதியப்பட்ட புகாரை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து 2023ல் தனி நீதிபதி உத்திரவிட்டிருந்தார். இதற்கிடையில், அதே புகார் சம்பந்தமாக மற்ற குற்றவாளிகளில் ஒருவரான பன்னீர்செல்வம் என்பவர் தன் மீது வழங்கப்பட்ட லுக்-அவுட் நோட்டீசை வாபஸ் பெறுவது சம்மந்தமாக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 2023ல் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். எனவே, சம்பந்தபட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுகிறது. குற்றப்பத்திரிகையில் ஒரு இன்ஸ்பெக்டரின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த காவல் அதிகாரியை குற்றவாளியாவார். எனவே, சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 3 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிடார்.
இதனை எதிர்த்து சம்மந்தபட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
