×

ஈரோடு, திருப்பூர். கரூர் மாவட்ட பகுதி கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்

வெள்ளக்கோவில், டிச. 11: ஈரோடு, திருப்பூர். கரூர் மாவட்ட பகுதி கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட்  தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தமிழக கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச் சங்க ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள மங்களபட்டி கிராமத்தில் நேற்று நடைபெற்றது. கீழ்பவானி பாசன சங்க செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வெங்கடாசலம், முறை நீர்பாசன சபை செயலாளர் செங்கோட்டையன், இயற்கை வாழ்வுரிமை இயக்க தலைவர் பொடாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முருங்கத்தொழுவு ரவி  வரவேற்றார்.

 தமிழக கீழ்பவானி பாசன சங்க தலைவர் நல்லசாமி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  தமிழகத்திலேயே மிக சிக்கனமான முறையில் நீர் நிர்வாகம் நடைபெற்று வரும் கீழ்பவானி பாசனம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன பகுதிகளில் குடிநீர் ஆதாரத்தையும். விவசாயிகளின் வேளாண் சாகுபடி வாழ்வாதாரத்தையும் பூர்த்தி செய்து வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள பவானிசாகர் அணையில் இருந்து ஆண்டுதோறும் இரு பிரிவுகளாக கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு கால்வாயில் திறந்துவிடப்படும் தண்ணீரை பயன்படுத்தி மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நஞ்சை, சம்பா, நெல், மற்றும் எண்ணெய் வித்து பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன கால்வாயில் ஒரே நேரத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவிற்கு தண்ணீர் திறந்து விடப்படும் போது கால்வாயில் ஏற்படும் உபரி நீர் மூலம் கால்வாயின் இருபுறமும் உள்ள நகர மற்றும் கிராம பகுதிகளில் கிணறுகள்.

ஆழ்குழாய் கிணறுகள். குளங்கள் நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் ஆதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதன்படி இத்திட்டம் சிறந்த மழைநீர் அறுவடை  திட்டமாகும். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தொடங்கி கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் அஞ்சூர் கிராமம் வரை கீழ்பவானி பாசன கால்வாய்களில் ரூ.1340 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து கான்கிரீட் தளம் அமைக்க தமிழக அரசு தற்போது நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இதன்படி கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட்  தளம் அமைத்தால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள நகர கிராம பகுதி பொதுமக்களின் குடிநீர் ஆதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். இதனால் பாசன பகுதி பாலைவனமாக மாறும அபாய சூழ்நிலை ஏற்படும். எனவே ஈரோடு, திருப்பூர், கரூர் பகுதிகளில் கீழ்பவானி பாசன கால்வாயில் விரிவாக்கம், நவீனம் என்ற பெயரில் கான்கிரீட்  தளம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  முடிவில் செயலாளர் வெற்றிவேல் நன்றி கூறினார்.

Tags : Tiruppur ,district area ,Karur ,canal ,Keelpavani ,
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...